12ஆவது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. நேற்று டெல்லி-மும்பை அணிகள் மோதிய போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத்தேர்வு செய்தது. அதில் அப்போது மும்பை அணிக்காக 17 வயது இளம் வேகப்பந்துவீச்சாளராக ரஷீக் சலாம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மும்பை அணிக்காக மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையோடு களம்கண்டார்.
யார் இந்த சலாம்...?
17 வயதேயாகும் ரஷீக் சலாம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதானால் அடையாளம் காணப்பட்ட சலாம்,தற்போது மும்பை அணிக்காக 20 லட்சரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுவிளையாடிவருகிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்காததையடுத்து, வாய்ப்புக்காக காத்திருந்த சலாமுக்கு, தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் சீனியர் அணிக்கு விளையாடும் வாய்ப்பு இவரது வீட்டின் கதவை தட்டியது.
பின்னர், விஜய் ஹசாரே தொடரில் களமிறங்கிய சலாம், 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மிகவும் இளவயதில் வேகத்துடன் சரியான ஸ்விங் பந்துகளையும் வீசுவதால் இவர் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ரஷீக் சலாம் - இர்ஃபான் பதான் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை அளிப்பவர் என்பதால் மும்பை அணி நிர்வாகமும் இவரை முதல் போட்டியிலேயே களமிறக்கியுள்ளது.
இவரைப் பற்றி இர்ஃபான் பதான் கூறுகையில், நிச்சயம் இந்திய அணிக்காக மிக விரைவில் களமிறக்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.