12ஆவது ஐபிஎல் சீசனுக்கான 32ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் கே.எல்.ராகுல்-கிறிஸ் கெய்ல் பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்த நிலையில், 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கெய்ல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களம் புகுந்த அகர்வால் அதிரடியாக ஆட்டம் காட்டினார். பின்னர் சோதி வீசிய 9ஆவது ஓவரில் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.
இதனையடுத்து மில்லருடன் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். ஒருமுனையில் ராகுல் நிதானமாக ரன்களை எடுக்க, மறுமுனையில் மில்லர் அதிரடியில் அட்டகாசப்படுத்தினார். முக்கியமாக 14ஆவது ஓவரை வீசிய சோதியின் பந்துவீச்சில், இருவரும்19 ரன்களை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 15ஆவது ஓவரை உனாத்கட் வீச, இந்த முறை ராகுல் பொளந்துகட்டினார். இந்த ஓவரில் 4, 1, 6, 1, 6, 2 என 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 136 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடியது.
இதனையடுத்து 16ஆவது ஓவரை வீசிய ஆர்ச்சர் பந்தில் பவுண்டரி அடித்து ராகுல் அரைசதத்தைக் கடந்தார். பின்னர், அதிரடிக்கு மாறிய ராகுல் 52 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, நிக்கோலஸ் பூரான் களமிறங்கினார்.
18 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்திருந்தது. நிக்கோலஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த மன்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய மில்லர் 40 ரன்களில்கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, கேப்டன் அஸ்வின் - முஜீப் இணை களத்தில் இருந்தது. அஸ்வின் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு கடைசி ஓவரில் 18 ரன்களை எடுத்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பாக ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.