தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தாஹிரின் பந்துவீச்சில் நடையைக் கட்டிய கொல்கத்தா! - இம்ரான் தாஹிர்

கொல்கத்தா: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களை எடுத்துள்ளது.

தாஹிர்

By

Published : Apr 14, 2019, 6:43 PM IST

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் களமிறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கிறிஸ் லின் அதிரடியாக ஆடினர். ஆனால், மறுமுனையில் சற்று அடக்கி வாசித்த சுனில் நரைன், சான்ட்னரின் பந்துவீச்சில் 2 ரன்களோடு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த நிதிஷ் ராணா, கிறிஸ் லின்னுக்கு ஒத்துழைத்தார். இதன் பலனாக, கிறிஸ் லின் பவுண்டரிகளும், சிக்சர்களையும் அடித்து அரைசதம் விளாசினார்.

கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 79 ரன்களை எடுத்துருந்த நிலையில், தஹாரின் பந்துவீச்சில் நிதிஷ் ராணா 18 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து உத்தப்பாவும் முதல் பந்திலேயே ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.

டு பிளசிஸ்

இதனால் 80 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணியில், கேப்டன் தினேஷ் கார்த்திக் ஐந்தாவது வீரராக களமிறங்கினார். கார்த்திக் - கிறிஸ் லின் இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. குறிப்பாக, ஜடேஜா வீசிய 14ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் கிறிஸ் லின் சிக்சர்களை பறக்கவிட்டார். பின் அதே ஓவரின் இறுதி பந்தில் தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரியை அடிக்க, மொத்தம் 23 ரன்கள் அந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு கிடைத்தது. இதனால், கொல்கத்தா அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்திருந்தது.

கிறிஸ் லின்

ராக்கெட் வேகத்தில் உயர்ந்துக்கொண்டிருந்த அந்த அணியின் ரன் ரேட்டை, தஹார் தனது சுழற்பந்துவீச்சின் மூலம் மாற்றினார். அவர் வீசிய 14ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் கிறிஸ் லின் ஆட்டமிழந்தார். 51 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 82 ரன்கள் அடித்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரஸல், முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த பந்தில் டாட் அதற்கு அடுத்த பந்தில் சிக்சர் அடித்து மிரட்டினார். ஆனால், ஐந்தாவது பந்திலேயே ரஸலையும் அவுட் ஆகினார் தாஹிர். இதனால், கொல்கத்தா அணி 15 ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்களை எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

இதைத்தொடர்ந்து, கொல்கத்தா அணியின் ரன்கள் மிகவும் குறையத் தொடங்கியதால், அதிரடியாக ஆட முயற்சித்த தினேஷ் கார்த்திக் 18 ரன்களிலும், ஷுப்மன் கில் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணி கடைசி ஐந்து ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே அடித்து மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

சென்னை அணி தரப்பில் இம்ரான் தாஹிர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ABOUT THE AUTHOR

...view details