12வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே குவித்தது.
அதைத் தொடர்ந்து ஆடிய மும்பை அணி 18.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய தோனி, 'எங்கள் அணியின் பேட்டிங் சரியில்லாததே தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன். ஏனெனில், உள்ளூர் மைதானத்தில் ஏழு போட்டிகளில் களமிறங்கிய பின்பும் பேட்ஸ்மேன்களால் இன்னும் சரியான தொடக்கத்தை அளிக்க முடியவில்லை. மூத்த வீரர்கள் மைதானத்துக்கு ஏற்றவாறு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அடுத்த போட்டியில் அந்த ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அது தவிர பல முக்கிய கேட்ச்சுகளை தவற விட்டதும் தோல்விக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
நாங்கள் முதல் இரண்டு இடங்களுக்குள் லீக் சுற்றை முடித்ததால் எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனினும் இதுபோன்ற தருணத்தில் போட்டியை இழப்பது நல்லது இல்லை. எனவே அடுத்த போட்டியில் எங்களது தவறுகளை திருத்தி வெற்றி பாதைக்குத் திரும்புவோம்' என்று தெரிவித்தார்.