12ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையே பிளே-ஆப் சுற்று போட்டிகளின் முடிவில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரின் முதல் போட்டியில் இருந்தே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து அசத்தியது. மேலும், சென்னை அணி லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தில் தோல்விகளை சந்தித்ததால், புள்ளிப் பட்டியலில் பின்னடைவையும் சந்தித்தது. அதுதவிர பிளே-ஆப்பின் முதல் போட்டியிலும் தோல்வியடைந்து அதிர்ச்சியையும் கொடுத்தது. இறுதியாக இரண்டாவது வாய்ப்பை முறையாக பயன்படுத்திய சென்னை அணி டெல்லி அணியை வீழ்த்தி எட்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறி மீண்டும் கெத்து காட்டியது.
இந்த தொடரில் சென்னை அணி பேட்டிங்கில் வாட்சன், டூபிளஸ்ஸிஸ், ரெய்னா, ராயுடு என வரிசையாக சிறந்த பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். அது தவிர தோனி, பிராவோ, ஜடேஜா போன்ற அதிரடி பின்வரிசை ஆட்டக்காரர்களும் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் தோனி பலமுறை அணியை ஆபத்தில் இருந்து காப்பாற்றி வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சில போட்டிகளில் மட்டுமே சோபித்த வாட்சன், டெல்லி அணிக்கு எதிரான இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்ம்க்கு திரும்பியுள்ளது சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
சென்னை அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சுழற்பந்து வீச்சைதான் நம்பி களமிறங்கி வருகிறது. அதற்கேற்றார் போல் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா என அனைவரும் சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகின்றனர். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெகிடி வெளியேறியது, டெத் ஓவர் பவுலரான பிராவோவின் காயம் போன்றவை அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இருப்பினும் சென்னை அணி தோல்வியுற்ற போட்டிகளில் கூட பவுலிங் ஒரு காரணமாக இருந்ததில்லை என்று சொன்னால் அது மிகையல்ல.