இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்சமாம் உல் ஹக் அறிவித்து உள்ளார்.
53 வயதான இன்சமாம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வு குழுத் தலைவராக பணியாற்றிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டாவது முறையாக தேர்வு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வு குழு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்தது.
இருப்பினும் இவ்விரு தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. குறிப்பாக, தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
தொடர் தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில் தேர்வுக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்சமாம் உல் ஹக் அறிவித்து உள்ளார். அதேநேரம், இன்சமாமின் ராஜினாமாவுக்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஏஜென்ட்டாக சொல்லப்படும் தல்ஹா ரெஹ்மானிக்கு சொந்தமான யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனத்தில் இன்சமாம் பங்குதாரராக உள்ளார்.