துபாய்:ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் (செப். 21) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 64 ரன்கள் அடித்து தனது 58ஆவது சர்வதேச அரை சதத்தை பதிவுசெய்தார். இந்நிலையில், ஐசிசி மகளிருக்கான ஒருநாள் போட்டியின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
தரவரிசையில் இந்திய வீராங்கனைகள்
பேட்டர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். முதல் பத்து வீராங்கனைகளுள் மற்றொரு வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா 701 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜுலன் கோஸ்வாமி ஓர் இடம் முன்னேறி நான்காவது இடத்திலும், பூனம் யாதவ் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பட்டியலில் தீப்தி சர்மா ஓர் இடம் முன்னேறி நான்காவது இடத்திலும் உள்ளனர்.
மாஸ் காட்டும் மிதாலி
மகளிர் கிரிக்கெட்டின் அடையாளமாக விளங்கும் மிதாலி ராஜ், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த ஜூன் மாதம், மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 22ஆம் ஆண்டை நிறைவு செய்தார்.
1999ஆம் ஆண்டு அறிமுகமான மிதாலி ராஜ், இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 669 ரன்களையும், 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,306 ரன்களையும், 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களையும் குவித்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2015ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டை இந்தியா மட்டுமில்லாது உலக முழுவதும் கொண்டு சென்றதில் மிதாலி ராஜின் பங்கு அளப்பறியது. இந்தாண்டுக்காண கேல் ரத்னா விருதுக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய, ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (செப். 24) காலை 8.45 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது.
இதையும் படிங்க: IPL 2021: ஹைதராபாத் அணியை அடிச்சுத் தூக்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!