லீட்ஸ்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, முதல் இன்னிங்ஸில் இந்தியா 78 ரன்களும், இங்கிலாந்து 432 ரன்களும் எடுத்தன.
இதனால், இந்தியாவைவிட இங்கிலாந்து 354 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி நேற்றைய (ஆக. 27) ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து, 139 ரன்கள் பின்தங்கியிருந்தது.
நான்காம் நாள் ஆட்டம்
இந்நிலையில், புஜாரா 91 ரன்களுடனும், கேப்டன் விராட் கோலி 45 ரன்களுடனும் இன்றைய (ஆக. 28) ஆட்டத்தைத் தொடங்கினர். நேற்று இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், இன்று அதே ஆட்டத்தை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஆட்டம் தொடங்கிய நான்காவது ஓவரிலேயே (ராபின்சன் பந்துவீச்சில்) புஜாரா 91 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறி, சதத்தை தவறவிட்டார்.
கோலி அவுட்
இதையடுத்து, ரஹானே உடன் ஜோடி சேர்ந்த கோலி, நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். ராபின்சன் வீசிய 90ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசி, இந்தத் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அதே போல், 5ஆவது பந்திலும் பவுண்டரி அடித்தார். இதனால், ராபின்சன் தனது பந்தை குட் - லெந்தில், நான்காம் ஸ்டம்ப் லைனில் வீசினார்.
உடலுக்கு நெருக்கமாக வந்த அந்த பந்தை கோலி விளையாட முயற்சிக்க, பந்து சிலிப்பில் இருந்த ரூட்டிடம் தஞ்சம் புகுந்தது. இதனால், கோலி 8 பவுண்டரிகளுடன் 55 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.