ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை, ஐசிசி டி20 உலகக்கோப்பை வரிசையில் டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த இரண்டாண்டு காலமாக நடைபெற்று வந்தது. வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா என 9 நாடுகள் இம்மாபெரும் தொடரில் பங்கேற்றன.
இந்த தொடர்தான் முதல் தொடர் என்பதால், இதை வெல்லும்பட்சத்தில் கிரிக்கெட்டின் நீண்ட வரலாற்றில் ஒரு பெரும்பக்கத்தை தன்வசமாக்கிக் கொள்ளலாம் என்பதே டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளின் ஆசையாக இருந்தது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என கிரிக்கெட் உலக பூர்வடிகள் இந்த கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்று கங்கணம்கட்டிக் கொண்டு அலைந்தற்கான காரணமும் இத்தொடரை கைப்பற்றுவதினால் கிடைக்கப்போகும் மிகப்பெரும் கௌரவம்தான்.
இது அதுக்கும் மேல
'ஐபிஎல் லெவலுக்கு பில்டப் கூடுக்குறாங்கப்பா' என இன்றைய சிறுவர்கள் இந்தொடர் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதுக்கும் மேல என்பதுதான் டெஸ்ட் வெறியர்களின் வெளிப்பாடு.
BLUE vs BLACK
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார் என்று கடந்த மார்ச் மாதமே உறுதியாகிவிட்டது. டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி என அனைத்து ஐசிசி முன்னணி தொடர்களையும் வென்றிருக்கும் இந்திய அணியும், ஒரு சாம்பியன்ஸ் டிராபியை (2000-01) தொடரை மட்டும் வென்றுள்ள நியூசிலாந்து அணியும்தான் இறுதிப்போட்டியைச் சந்திக்கின்றன.
இரண்டு நாள்களுக்கு முன் இரு அணிகளும் தங்களின் 15பேர் கொண்ட ஸ்குவாடை அறிவித்தன. அதிலிருந்து ஆரம்பமாகிவிட்டது ரசிகர்களின் கணிப்புகளும் எதிர்பார்ப்புகளும்.
வில்லன் வில்லியம்சன்
2015 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து அணி, அடுத்தடுத்த வருடங்களில் வேறு உருவத்தை பெற ஆரம்பித்தது. கேன் வில்லியம்சனின் நேர்த்தியான கேப்டன்சி, உள்நாட்டில் தோல்வியுறாதது, பலமான இடது-வலது வேகப்பந்துவீச்சு என பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, 2019 உலகக்கோப்பையிலும் மிரட்டும் சக்தியாக நியூசிலாந்து அணி உருவெடுத்தது.
இதில் கேன் வில்லியம்சனின் பங்கு மிகப்பெரிது. தன்னுடைய பேட்டிங்கால் மட்டுமில்லாமல், களத்தில் கேப்டனாகவும் பல பங்களிப்பை நியூசிலாந்து அணிக்கு அளித்திருக்கிறார். 2020இல் டெஸ்டில் நம்பர்-1 அணியாக, இந்தியா அசுரப் பலத்துடன் நியூசிலாந்தில் மண்ணில் காலடி எடுத்து வைத்தது.
அப்போது நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியாவை 0-2 என்ற கணக்கில் வீழ்த்தியது வில்லியம்சன் குழு. அதன்பின் நடந்த பாகிஸ்தான், மேற்கு இந்திய திவுகள் அணிகளுக்கு எதிரான தொடரையும் அசால்டாக வென்றனர் நியூசி வீரர்கள். இதனால்தான் உள்நாட்டில் அசைக்கமுடியாத அணியாக கருந்தோப்பிகள் (நியூசிலாந்து) மாறினார்கள்
உள்நாட்டு போட்டிகளில் எல்லாம் இரட்டை சதம், தொடர் சதங்கள் என ரன்களை குவித்துவந்த கேன், வெளிநாடுகளில் பவ்வியமான ஆட்டத்தையே தற்போது வெளிப்படுத்திவருகிறார். இருப்பினும், உலகத்தர பேட்ஸ்மேனான அவரின் விக்கெட்டை எடுப்பதுதான் கோலி&கோ-விற்கு மிகுந்த தலைவியை தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
கோலி-னா சும்மாவா
ரெண்டு வருசமாச்சு, கோலியோட சென்சூரியைப் பார்த்து என ரசிகர்கள் குமுறிக்கொண்டிருக்கின்றனர். நவம்பர் 2019 பிறகு டெஸ்டில் ஒரு சதத்தைக் கூட, கேப்டன் கோலியால் பதிவுச்செய்ய முடியவில்லை. சென்ற ஆண்டு பெரும்பான்மை போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும், 2020 நியூசிலாந்து தொடர், 2021 இங்கிலாந்து தொடர் என முக்கியப் போட்டிகள் எதிலும் அவர் சதத்தை நெருங்கவேயில்லை.
இது அணிக்கு பெரும் இழப்பு என்றாலும், அணியின் பேட்டிங் கோலியைச் சார்ந்து இருக்கவில்லை என்பது சற்று நிம்மதி. பவுல்ட், சவுத்தி ஆகியோரின் டீப் இன்-ஸ்விங் டெலிவரியை கோலி எப்படி சமாளித்து, தன்னுடைய கேப்டன் இன்னிங்ஸை ஆடப் போகிறார் என்பதைதான் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சலைக்காத பேட்டிங் வரிசை
வில்லியம்சன், டெய்லர், கான்வே, லேத்தம், ப்ளன்டேல், பிஜே வாட்லிங், நிக்கோலஸ் என வெயிட்டான முன்வரிசை பேட்ஸ்மேன்களை நியூசிலாந்து வைத்திருந்தாலும், ஜேமீசன், வாக்னர் போன்ற பந்துவீச்சாளர்கள் கூட நிலைத்துநின்று ஆடுவார்கள் என்பது 'கிவிஸ்'-இன் (kiwis) சிறப்பு.