இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி டெஸ்ட், டி20 தொடர்களில் பங்கேற்றது. இதையடுத்து இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்ப்யணம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அணி சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு தலையசைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அடுத்த ஆண்டு ஜனவரியில் பாகிஸ்தானில் டி20 தொடரில் பங்கேற்க திட்டமிட்டது. ஆனால் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் பிக் பாஷ் தொடரில் பங்கேற்க செல்வதால், பலம் குறைந்த இரண்டாம் கட்ட அணியை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர் ஒத்தி வைக்கலாம் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்தது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இரு டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.
கடைசியாக 2005ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஆடியது. இதையடுத்து 2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் இருநாடுகளும் கிரிக்கெட் ஆடியது.
இதனால் 16 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதைப்பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைமை நிர்வாகி வாசிம் கான் கூறுகையில், '' 2021ஆம் ஆண்டு அக். இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரு டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணி வரவுள்ளதால், மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து 2022-23 சீசனுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவும் 2021-22 சீசனில் பாகிஸ்தானுக்கு வரவுள்ளது. அதேபோல் 2022-23ஆம் ஆண்டு பிஎஸ்எல் தொடருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முழு ஆதரவும் வழங்கவுள்ளதாக உறுதி கூறியுள்ளது'' என்றார்.