லீட்ஸ்: இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவான நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 432 ரன்கள் எடுத்து, இந்தியாவைவிட 354 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
மூன்றாம் நாள்
இதையடுத்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை நேற்று (ஆகஸ்ட் 27) தொடங்கியது. தேநீர் இடைவேளை முன்புவரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. லார்ட்ஸில் சதம் அடித்த ராகுல், முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான நிலையில், இம்முறை 8 ரன்களில் வெளியேறினார்.
இந்நிலையில், ரோஹித் சர்மா 59 ரன்களுடனும், புஜாரா 40 ரன்களுடனும் நேற்றைய ஆட்டத்தின் மூன்றாம் செஷனை தொடங்கினர். செஷன் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே, ரோஹித் சர்மா எல்.பி.டபிள்யூ. (Umpires call) முறையில் ஆட்டமிழந்தார். ரோஹித் 156 பந்துகளைச் சந்தித்து ஏழு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 59 ரன்களை எடுத்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
வழக்கம்போல், நான்காவதாகக் கோலி களமிறங்கினார். கடந்த இன்னிங்ஸில் இருவரும் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தனர். அதனால், வேகக் கூட்டணியான ஆண்டர்சன், ராபின்சன், ஓவர்டன் ஆகியோரை கேப்டன் ரூட் மாறி மாறி பந்துவீச அழைத்தார்.
மூன்றாம் நாள் நிறைவு
இருவரும் தேவையற்ற பந்துகளைத் தொடாமல், தவறான ஷாட்களைத் தேர்ந்தெடுக்காமல் சரியான முறையில் விளையாடினர். ராபின்சன் வீசிய 51ஆவது ஓவரில் புஜாரா பவுண்டரி அடித்து 30ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். விராட் கோலியும் புஜாராவுக்குப் பக்கபலமாக நின்று விளையாட ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது.