தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENG vs IND: ஆல்-அவுட்டாக அடம்பிடிக்கும் இங்கிலாந்து; ரூட் சாதனை சதம்

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 423 ரன்களைக் குவித்து, 345 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

ENG vs IND
ENG vs IND

By

Published : Aug 27, 2021, 6:29 AM IST

Updated : Aug 27, 2021, 10:40 AM IST

லீட்ஸ்: இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவான நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஆக. 25) லீட்ஸ் நகரத்தின் ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது.

இந்திய இன்னிங்ஸ்

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, தனது முதல் இன்னிங்ஸில் (42.4 ஓவர்கள்) 78 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ரோஹித் 19 ரன்களையும், ரஹானே 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சுத் தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் - ராபின்சன், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் நாள் முடிவு

பின்னர், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்திருந்தது. ஹசீப் ஹமீத், பர்ன்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், அவர்கள் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

தேநீர் இடைவேளை

இந்நிலையில், பர்ன்ஸ் 61 ரன்களிலும், ஹமீத் 68 ரன்களிலும், டேவிட் மலான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், நேற்று (ஆக. 26) தேநீர் இடைவேளைக்கு முன்னர்வரை (94 ஓவர்கள்), இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது (முன்னிலை - 220 ரன்கள்).

ஜோ ரூட் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் சிராஜ், ஜடேஜா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

23ஆவது சதம்

தேநீர் இடைவேளைக்குப் பின்னர், கேப்டன் ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் இணைந்தார். அசுர வேகத்தில் ரன்களைக் குவித்துவந்த ரூட், தான் சந்தித்த 124 பந்துகளில் தனது 23ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். கடந்த மூன்று போட்டிகளில் ரூட் மூன்று சதங்களைப் பதிவுசெய்துள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில், இலங்கைக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் தலா ஒரு சதமும், அடுத்து நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் சதம் என்று தொடர்ச்சியான மூன்று போட்டிகளில், மூன்று சதங்களைக் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட்டுகள் வீழ்ச்சி

பின்னர், பேர்ஸ்டோவ் 29, பட்லர் 7, ரூட் 121, மொயின் அலி 8, சாம் கரண் 15 என சீரான வேகத்தில் விக்கெட்டுகள் விழுந்தது. மீதம் இருந்த இரண்டு விக்கெட்டுகளையும் விரைவாகக் கைப்பற்றி விடலாம் என்று எண்ணிய இந்திய அணிக்கு, ஓவர்டன், ராபின்சன் இணை தடையாக இருந்தது.

ஓவரைக் கடத்திய ஓவர்டன்

இதன்மூலம், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் (129 ஓவர்கள்) இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 423 ரன்களைக் குவித்தது. ஓவர்டன் 24 ரன்களுடனும், ராபின்சன் ரன் ஏதும் இன்றியும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி பந்துவீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சிராஜ் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மூன்றாம் நாள்

இங்கிலாந்து அணி 345 ரன்கள் இந்தியா அணியைவிட முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், மீதம் இருக்கும் இரண்டு விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டியது இந்தியாவிற்கு அவசியமானது.

முழுமையாக மூன்று நாள்கள் கைவசம் இருக்கும் நிலையில், இந்தியா ஏறத்தாழ 350 பின்தங்கி இருக்கிறது. இதனால், அடுத்த ஐந்து செஷன்களுக்கு இந்தியா பேட்டிங் செய்தால் மட்டுமே ஆட்டத்தை டிராவை நோக்கி கொண்டுசெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் ஆட்டம் செஷன் வாரியாக

முதலாவது செஷன்: இங்கிலாந்து அணி - 26 ஓவர்கள் - 62/2

இரண்டாவது செஷன்: இங்கிலாந்து அணி - 26 ஓவர்கள் - 116/1

மூன்றாவது செஷன்: இங்கிலாந்து அணி - 35 ஓவர்கள் - 125/5

இதையும் படிங்க:பயிற்சியில் குறைவு; ஆட்டத்தில் நிறைவு - ஆண்டர்சன் ரகசியம்!

Last Updated : Aug 27, 2021, 10:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details