தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENG vs IND: ஆண்டர்சனால் ஆட்டம் கண்டது டாப்-ஆர்டர்; கோலி மீண்டும் ஏமாற்றம் - இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் போட்டி

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்னர்வரை இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து நட்சத்திர பந்துவீச்சாளர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஆண்டர்சன்
ஆண்டர்சன்

By

Published : Aug 25, 2021, 7:12 PM IST

லீட்ஸ் (இங்கிலாந்து):இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவானது. அடுத்த, இரண்டாவது போட்டியில் இந்திய அணி, 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் இன்று (ஆக. 25) தொடங்குகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல்நாள் ஆட்டம்

இதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். கடந்த இரண்டு போட்டிகளிலும் வலுவான தொடக்கத்தை அமைத்து தந்த இணை, இம்முறை பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட்டாரனார். அவரை தொடர்ந்து புஜாரா 1 ரன்னில், ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஐந்து ஓவர்கள் தாக்கு பிடித்த கேப்டன் கோலி 7 ரன்களில் ஆண்டர்சன் - பட்லர் இணையிடமே வீழ்ந்து நடையைக்கட்டினார்.

ஆண்டர்சனின் அற்புதம்

ஆண்டர்சனின் இந்த மூன்று விக்கெட்டுகளும் இந்திய அணியின் பேட்டிங் பலவீனத்தை வெளிச்சமிட்டு காட்டியது. கடந்த இரு போட்டியிலும் ஆண்டர்சனை அசால்டாக 'டீல்' செய்த ராகுல், இம்முறை ஆண்டர்சனின் அவுட்-சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்திவீச்சு வலையில் சிக்கினார். புஜாரவும் இதே அவுட் ஸ்விங் டெலிவரியில்தான் தனது விக்கெட்டை இழந்தார்.

கோலி - ஆண்டர்சன் யுத்தத்தில் தொடர்ந்து கோலி கோட்டைவிட்டு வரும் நிலையில், இன்றும் ஆண்டர்சனின் வுபுள்-சீம் (wobble-seam) பந்துவீச்சில் பலியானார். ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் லயனை அடுத்து, ஆண்டர்சனும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை ஏழாவது முறையாக வீழ்த்தியுள்ளார்.

இதன்பின்னர், ரோஹித் சர்மாவுடன், ரஹானே இணைந்து சீராக ரன்களை எடுத்துவந்தார். இதனால், இந்தியா 25ஆவது ஓவரில் 50 ரன்களை கடந்தது.

முடிந்தது முதல் செஷன்

இந்நிலையில், ராபின்சன் வீசிய 26ஆவது ஓவரில் ரஹானே 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.இதன்மூலம் இந்திய அணி, 25.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ராபின்சன் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இன்னும் இரண்டு செஷன்கள் மீதம் உள்ள நிலையில், இந்தியா ஆல்-அவுட்டை தவிர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முதல் செஷன் நிலவரம்: இந்தியா - 25.5 ஓவர்கள் 56/4

இதையும் படிங்க: Tokyo Paralympics: டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் ஏமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details