பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நடைபெற 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை (டிச.03) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
தொடரை கைப்பற்றினாலும் இந்திய அணி 4-1 என்ற முன்னிலையில் தொடரை முடிக்க விரும்பும். கடந்த போட்டியில் இந்திய அணியில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல் பந்து வீச்சாளரான தீபக் சகர் ஆஸ்திரேலிய வீரர்களான டிம் டேவிட் மற்றும் ஷார்ட் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினாலும், அவர் 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் விடுக்கொடுத்திருந்தார்.
இந்த இருவரும் வர இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதால், நாளைய போட்டியில் இவர்களது பங்களிப்பு முக்கியதுவம் பெறுகிறது. ஆஸ்திரேலிய அணியை பெருத்தவரையில் அவர்கள் எதிர்வரும் டி20 உலகக் கோப்பையை நோக்கி அணியை தயார்படுத்த நினைப்பதால், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பல மாற்றங்களை இத்தொடரில் கொண்டு வந்தனர். கடந்த போட்டியில் கூட 5 மாற்றங்களை வைத்திருந்தனர். இருப்பினும் அவர்கள் தொடரை இழந்தாலும், நாளைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற நினைப்பார்கள்.