சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் லீக் சுற்றில் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும்.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் 10 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட 10 நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் 5 லீக் ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆசிய கோப்பை என அடுத்தடுத்த தொடர்களில் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், உலகக் கோப்பையிலும் தனது பங்களிப்பை முழுமையாக தருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
அவர்களுக்கு இடியாய் இறங்கியது போல், தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் சுப்மான் கில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுப்மான் கில் விரைவில் குணமடைந்து அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மான் கில் இல்லாதபட்சத்தில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக யார் களமிறங்குவார்கள் என்ற சந்தேகம் உள்ளது.
இதையும் படிங்க :India Vs Australia : மேட்ச் பார்க்க போறீங்களா! முதல்ல இதை படிச்சுட்டு போங்க! எவ்வளவு ரூல்சு?