தமிழ்நாடு

tamil nadu

Ind Vs SA : தென் ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளியது இந்தியா! தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 6:04 PM IST

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Etv Bharat
Etv Bharat

ஜோகன்னஸ்பெர்க் :தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரி நிறைவு பெற்ற நிலையில், அதில் 1க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (டிச. 17) ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமகா ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்களும், தொடக்க வீரர் டோனி ஷோர்சி 28 ரன்களும் எடுத்தனர். 27 புள்ளி 3 ஓவர்களில் அந்த அணி 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆடமிழந்து வெளியேறினர்.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அவெஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழத்தினர். தொடர்ந்து இந்திய அணி 117 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த முறை சோபிக்கவில்லை. வெறும் 5 ரன்களில் கெய்க்வாட் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் மற்றொரு தொடக்க வீரர் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுடன் கூட்டணி அமைத்து விளையாடினார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை இருவரும் திறம்பட கையாண்டு விளையாடினர். அதேநேரம் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

அபாரமாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் (52 ரன்) அரை சதம் விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். மறுபுறம் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்த தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். 16 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழக வீரர் சாய் சுதர்சன் 55 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் நின்றார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. ஆட்டநாயக விருதை 5 விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் தட்டிச் சென்றார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி க்பெர்ஹாவில் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க :IND vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் - இஷான் கிஷன் திடீர் விலகல்! வெளியான காரணம்?

ABOUT THE AUTHOR

...view details