ஹாங்சோ :ஆசிய விளையாட்டில் நேபாளம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 19வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 20 ஒவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலாவது காலி இறுதி ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்சை கேப்டன் ருதுராஜ் மற்றும் யாஸ்சஸ்வி ஜெய்ஸ்வால் தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் நேபாள வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அடித்து விளையாடி ஜெய்ஸ்வால் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி வாண வேடிக்கை காண்பித்தார்.
மறுபுறம் கேப்டன் ருதுராஜ் 25 ரன், திலக் வர்மா 2 ரன், ஜித்தேஷ் சர்மா 5 ரன் என அடுத்தடுத்து நடையை கட்டினர். இருப்பினும், நேபாளம் பந்துவீச்சி விளாசித் தள்ளிய ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் விளாசியது. ஷிவம் துபே 25 ரன்களும், ரிங்கு சிங் 37 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் நின்றனர்.