தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Ind Vs SA: சஞ்சு சாம்சன் கன்னி சதம்! இந்திய அணியின் வெற்றிக்கு இதுவும் காரணமா?

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 7:12 AM IST

Etv Bharat
Etv Bharat

பார்ல் :இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில், அதில் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்கியது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும், டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றன.

இதனால் தொடர் 1-க்கு 1 என்ற சமன் ஆனது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (டிச. 21) பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரஜத் படிதர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தொடங்கினர். இந்திய அணிக்கு தொடக்க அவ்வளவு பெரியதாக அமையவில்லை. ரஜத் படிதர் 22 ரன்களும், சாய் சுதர்சன் 10 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே கூட்டணி அமைத்த சஞ்சு சாம்சன், கேப்டன் கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் தென் ஆப்பிரிக்க வீரர்களை துவம்சம் செய்தார். மறுபுறம் கே.எல்.ராகுல் தன் பங்குக்கு 21 ரன்கள் குவித்து வெளியேறினார். திலக் வர்மா - சஞ்சு சாம்சன் ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணியின் ரன் கணக்கை உயர்த்தினர். அடித்து ஆடிய திலக் வர்மா 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும், மற்றொருபுறம் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று விளையாடி அணியின் ரன் கணக்கை உயர்த்தினார். அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் (108 ரன்) சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டும், நண்ட்ரே பர்கர் 2 விக்கெட்டும், வில்லியம்ஸ், கேசவ் மகராஜ், வியான் மல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

தென் ஆபிரிக்க அணி வீரர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாக நெருக்கடி கொடுத்தனர். விளைவு விக்கெட் அறுவடை தான். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறி வந்தது. தொடக்க வீரர் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 19 ரன், ராஸ்ஸி வான் டர் துஸ்சென் 2 ரன், கேப்டன் எய்டன் மார்க்ராம் 36 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.

விதிவிலக்காக மற்றொரு தொடக்க வீரர் டோனி டி சோர்ஸி தன் பங்குக்கு 81 ரன்கள் குவித்து போராடினார். இருப்பினும் பலன் அளிக்கவில்லை. இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சுக்கு தென் ஆப்பிரிக்க அணி சுருண்டது. 45 புள்ளி 5 ஓவர்களில் 218 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது.

இதன் மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவெஷ் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார். அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதையும் படிங்க :சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டி 2023: முதல் மூன்று இடத்தை தட்டி சென்ற இந்திய வீரர்கள்.. !

ABOUT THE AUTHOR

...view details