தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND Vs WI: டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி! - Hardik pandya

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2023
IND vs WI 2023

By

Published : Aug 14, 2023, 9:13 AM IST

புளோரிடா: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நேற்று (ஆகஸ்ட் 13) அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் உள்ள லாடர்ஹில் நகரில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒடியன் ஸ்மித் மற்றும் ஓபேட் மெக்காய் நீக்கப்பட்டு அல்சாரி ஜோசப், ரோஸ்டன் சேஸ் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் களம் இறங்கினர். கடந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அரைசதத்தை எட்டிய இருவருமே இந்த முறை ஏமாற்றம் அளித்தனர். ஜெய்ஸ்வால் 5 ரன்களும், ஷுப்மன் கில் 9 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அதன் பின்பு சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் கைகோர்த்தனர். இருவரும் நன்றாக விளையாடி வந்த நிலையில் திலக் வர்மா 27 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களம் வந்த சாம்சன் 13 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 61 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேற, அடுத்து வந்த பேட்டர்கள் யாரும் நிலைக்கவில்லை.

இதனால் இந்த அணியால் 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். அகேல் ஹொசின், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்களும், ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 10 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த நிகோலஸ் பூரான், பிராண்டன் கிங்குடன் கைகோர்த்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதை நோக்கி நகர்த்தினர்.

12.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிக்கொண்டிருந்த போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்பு வானிலை சரியானதால் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. நன்றாக விளையாடி வந்த பூரான் 4 சிக்சர்கள், 1 பவுண்டரிகளுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின் ஷாய் ஹோப், பிராண்டன் கிங்குடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஒவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிராண்டன் கிங் 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 85 ரன்களும், ஷாய் ஹோப் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் திலக் வர்மா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், தொடரையும் 3-2 என்ற கணக்கில் வென்றது. ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்ட நாயகனாக தேர்வானார். மேலும், இந்த தொடரில் 176 ரன்கள் விளாசிய நிகோலஸ் பூரான் தொடரின் நாயாகனாக தேர்வானார்.

இதையும் படிங்க:உலக கவனத்தை ஈர்க்கும் தமிழகம்.. பன்னாட்டு விளையாட்டு மையமாக மாறுவதால் மக்களிடையே பெருகும் ஆர்வம்!

ABOUT THE AUTHOR

...view details