மொஹாலி: ஐசிசி ஒருநாள் கோப்பை இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றது. அந்த வகையில், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் விளையாடுகிறது. இந்த தொடர் போட்டியில் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.
மொஹாலியில் தொடங்கவுள்ள முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்த தொடரை முழுமையாக கைப்பற்றும் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி முன்னேறும். அதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் ஏதும் குறையாது.
இந்தியாவைப் பொறுத்தவரை, முதல் இரண்டு போட்டியில் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். அணியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பதிலாக திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது இளம் வீரர்களான இவர்களுக்கு உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காயத்தில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் மீது ரசிகர்கள் இடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல், சுமார் 21 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் ரவிச்சந்திர அஸ்வின் திரும்பியுள்ளதால் அவரின் பந்து வீச்சின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.