ராய்ப்பூர்: இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (டிச. 1) இரு அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி பேட் செய்ய வந்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் களம் இறங்கினர். சற்று நல்ல தொடக்கத்தையே கொடுத்த இந்த ஜோடி 50 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து களம் வந்த இஷான் கிஷன் 8 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால், அதன்பின் வந்த ரிங்கு சிங் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோர் ஓரளவு உயர்ந்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த கெய்க்வாட் இப்போட்டியில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜிதேஷ் சர்மா 35 ரன், அக்சர் பட்டேல் டக் அவுட் , தீபக் சகர் டக் அவுட், ரிங்கு சிங் 46 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது.
தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் பிலிப் களம் புகுந்தனர். 3.1 ஓவர்களில் 40 ரன்களை எடுத்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. பிலிப் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஹெட் 31 ரன், ஆரோன் ஹார்டி 8 ரன், பென் மெக்டெர்மாட் 19 ரன், டிம் டேவிட் 19 ரன் என ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் அடுத்து களம் இறங்கிய ஷார்ட் மற்றும் கேப்டன் மேத்யூ வேட் ஆகியோர் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வர் என எதிர்பார்த்த நிலையில், ஷார்ட் 22 ரன்களில் தீபக் சகர் பந்து வீச்சில் வெளியேறினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இதையும் படிங்க:உலகக் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த விவகாரம் - மிட்செல் மார்ஷ் விளக்கம்!