ராய்ப்பூர் : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி தலா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெற்றது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
விசாகபட்டினத்தில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கொண்டு வந்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (டிச. 1) நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் முழு வீச்சில் செயல்ப்பட்டாலும் கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் கோட்டைவிட்டது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி நிச்சயம் முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையால் திலக் வர்மாவின் இருப்பிடம் கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோல், இன்றைய ஆட்டத்தில் மாற்று வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 ஆட்டங்களில் களம் காணாத வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர் உள்ளிட்டோரில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேநேரம், ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணி பழைய பார்முக்கு மீண்டும் வந்து உள்ளது. கடந்த ஆட்டதில் மேத்யூ வேட் மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை பறித்தனர்.