இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தான் இப்போது அனைத்து ரசிகர்களும் காத்திருக்கும் முக்கியமான தொடர். ஏனென்றால் வலிமையான இந்திய பந்துவீச்சாளர்கள், கோலி இல்லாமல் ஆடப்போகும் கடைசி மூன்று டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியா அணியின் வலிமையான பேட்டிங், பகலிரவு டெஸ்ட் போட்டி, நீண்ட நாள்களுக்கு பின் ரசிகர்களுக்கு அனுமதி என எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
இந்தத் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா பேசியுள்ளார். அதில், ''2018-19ஆம் ஆண்டை ஒப்பிடும்போது ஆஸி.யின் பேட்டிங் வரிசையில் வலிமை கூடியுள்ளது. ஆனால் வெற்றிகள் ஒருபோதும் எளிதாக கிடைக்காது. அந்நிய மண்ணில் வெற்றிபெற வேண்டும் என்றால், நிச்சயம் கடினமாக உழைக்க வேண்டும்.
ஸ்டீவ், வார்னர், லபுசானே ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்தியா அணியின் சாதகம் என்னவென்றால், நமது பந்துவீச்சாளர்கள் கடைசி தொடரில் ஆடியவர்களே இந்தத் தொடரிலும் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு ஆஸ்திரேலிய மைதானங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்ற சரியான திட்டம் உள்ளது. அந்தத் திட்டங்களை சரியாக செயல்படுத்தினால், நிச்சயம் வெற்றிபெறுவோம். அவர்களால் ஸ்டீவ், லபுசானே, வார்னர் ஆகியோர் வீழ்த்த முடியும்.
பகலிரவு டெஸ்ட் போட்டி வேறு விதமான சவால். பிங்க் பந்தில் வேகமாகவும், பவுன்சரை எதிர்கொள்வதும் எளிதல்ல. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவின் கூக்கபுரா பந்தில் எதிர்கொள்வது இன்னும் சவாலானது. எவ்வளவு வேகமாக அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு நல்லது.