ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் - ஃபின்ச் இணை இந்திய பந்துவீச்சாளர்களை சிதறடித்தது. 10 ஓவர்களில் 51 ரன்களை சேர்த்த இந்த இணை, 20 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் கடக்க, ஆஸி.வின் ரன்கள் வேகமாக உயரத் தொடங்கியது. இந்த இணையின் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்தது. பின்னர் அதிரடிக்கு மாறிய வார்னர் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் - ஃபின்ச் இணை சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடித்தது. இரண்டு நாள்களுக்கு முன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதைப் போல், தொடக்கம் முதலே சரியான ரிதமில் அதிரடியாக ஆடினார். இதன்பலனாக 36 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அசத்த, மறுபக்கம் ஃபின்ச் சதம் விளாசினார்.
பின்னர் அவர் 114 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழக்க, ஆஸி. அணி 40 ஓவர்களுக்கு 264 ரன்களை எடுத்தது. தொடர்ந்து வந்த ஸ்டோய்னிஸ் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் - ஸ்டீவ் ஸ்மித் இணை இணைந்தது.
சாஹல் ஓவரில் மேக்ஸ்வெல் ஏற்கனவே பலமுறை ஆட்டமிழந்துள்ளார் என்பதால், கேப்டன் கோலி சாஹலிடம் பந்தை கொடுத்தார். ஆனால் அந்த ஓவரில் மட்டும் மேக்ஸ்வெல் இரண்டு சிக்சர் உள்ப்ட 20 ரன்களை சேர்த்தார்.