ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர், பூர்வகுடிகள் வடிவமைத்த ஜெர்சியை அணிந்து களமிறங்கவுள்ளனர். இன்று அந்த ஜெர்சி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெர்சியை ASICS நிறுவனம் சார்பாக பூர்வகுடிகளான ஆண்டி பியோனா, கோர்ட்டினி ஹெகன் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா பதிவிட்டுள்ள ட்வீட்டில், ''1868ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியில் கிளார்க் என்ற வீரர் இடம்பெற்றிருந்தார். மறைந்த வீரர் கிளார்க், கொசன்ஸ் என்னும் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்தவர். இந்த ஜெர்சி வடிவமைப்பு முன்னோர்களுக்கும் கடந்த கால, தற்போதைய மற்றும் எதிர்கால பூர்வகுடி கிரிக்கெட் வீரர்களுக்குமான மரியாதையாகப் பார்க்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.