நாக்பூர்:இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சில் அந்த அணி 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லபுஷேன் 49 ரன்களும், ஸ்மித் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை சாய்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார். 120 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இன்று (பிப்.11) 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மர்ஃபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 84 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
முகமது சமி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மர்ஃபி 7 விக்கெட்களை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தது. கவாஜா(5), வார்னர்(10), லபுஷேன்(17) என ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.