கேப் டவுன்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. டி20 தொடரை இந்திய அணி சமன் செய்ததை அடுத்து, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, நேற்று கேப் டவுன் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்பின் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 34.5 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக விராட் கோலி 43, ரோகித் 39, சுப்மன் கில் 36 மற்றும் கே.எல்.ராகுல் 8 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் எவ்வித ரன்களும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 11 பந்துகளில் 6 விக்கெட்களை இழந்தது இதுவே முதல் முறையாகும்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, நிகிடி மற்றும் நந்த்ரே பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை 98 ரன்கள் பின்னடைவுடன் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்தது.
இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவர்கள் முடிவில் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. தொடக்க வீரராக களம் இறங்கிய எய்டன் மார்க்ரம் நிதானம் மற்றும் அதிரடி கலந்த ஆட்டத்தின் மூலம் சதம் அடித்தார். அதன்பின் 106 ரன்களுக்கு சிராஜ் பந்து வீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் 13.5 ஓவர்களை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா, 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மற்ற பந்து வீச்சாளர்களான மகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்தார். ரோகித் சர்மா 17 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அதேபோல், இந்த வெற்றியின் மூலம் கேப் டவுன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது. மேலும், ஆட்ட நாயகனாக முகமது சிராஜும், தொடரின் நாயகர்களாக ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் தென் ஆப்பிரிக்கா வீரர் டீன் எல்கர் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வார்னர் ஓய்வு!