ஐதராபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஐசிசியின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது.
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப், மொஹாலியில் உள்ள பி.எஸ். பிந்த்ரா மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அபாரமாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய அணியை 276 ரன்களில் சுருட்டினர். 50 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 71 ரன், சுப்மான் கில் 74 ரன், சூர்யகுமார் யாதவ் 50 கேப்டன் கே.எல். ராகுல் 58 ரன் என விளாசினர். 48 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
கேப்டன் கே.எல்.ராகுல் கடைசி பந்தை முன்னாள் கேப்டன் டோனி போல் சிக்சருக்கு பறக்க விட்டு வின்னிங் ஷாட் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் முதலிடத்தை பிடித்து உள்ளது. இதன் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி முதலிடத்தை வரலாற்று சிறப்பை பெற்று உள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் 264 புள்ளிகளுடனும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 புள்ளிகளும், டெஸ்ட் கிரிக்கெட் வடிவில் இந்திய அணி 118 புள்ளிகளும் பெற்று உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
அணிகள் தரவரிசை மட்டுமின்றி தனி நபர்கள் தரிவரிசையிலும் இந்திய வீரர்கள் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர். டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 889 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவில் ஆசிய கோப்பை நாயகன் முகமது சிராஜ் 694 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் 879 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தொடர்கின்றனர். அதேபோல் டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்திய நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா 455 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க :ஐசிசி உலகக் கோப்பை 2023 பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?