மொகாலி: இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஸ் மற்றும் டேவிட் வார்னர் களம் கண்டனர்.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஷமி பந்து வீச்சில் மார்ஸ் ஆட்டமிழந்தார். அதன் பின் ஸ்மித், வார்னர் ஜோடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார். 18.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டேவிட் வார்னர் தனது விக்கெட்டை ஜடேஜாவிடம் பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஸ்மித் 41, லபுசன் 39, கிரீன் 31, ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்களில் வெளியேறினர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் பந்து வீச்சு சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா, அஷ்வின் மற்றும் ஜடேஜா அவர்களது பங்கிற்கு தலா 1 விக்கெட் எடுத்தனர்.