மும்பை: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி, 325 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில், அதிகபட்சமாக மயாங்க அகர்வால் 150 ரன்களை குவித்தார். நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை புரிந்தார்.
540 ரன்கள் இலக்கு
இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு சுருண்டது. எனவே, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு முன்னிலை பெற்றது.
நியூசிலாந்து அணிக்கு பாலோ-ஆன் வாய்ப்பினைக் கொடுக்காமல், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இந்திய அணி தரப்பில் களமிறங்கிய மயாங்க் 62, புஜாரா 47 ரன்களை எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளத்தனர். இதையடுத்து, விராட் கோலி 36, கில் 47, அக்ஸர் 41 என ரன்களை குவித்தனர். இந்தியா 276/6 என்ற நிலையில் இருந்தபோது டிக்ளர் செய்து நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
நான்காம் நாள் ஆட்டம்
போட்டியில் இரண்டரை நாள்கள் மீதமிருந்த நிலையில், ஆட்டத்தின் வெற்றி இந்தியாவின் பக்கமே இருந்தது. கடினமான இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸும் சரியாக அமையவில்லை.
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 140 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.இந்திய அணி வெற்றிக்கு 5 விக்கெட்டுகளும், நியூசிலாந்து 400 ரன்களும் தேவைப்பட்டது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று (டிச. 6) தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய ஆறாவது ஓவரின்போது, ரச்சின் ரவீந்திரா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, வந்த ஜேமீசன், டிம் சௌதி, வில்லியம் சோமர்வில்லி, ஆகியோரை ஜெயந்த் யாதவ் அடுத்தடுத்து வெளியேற்றி, இந்தியாவின் வெற்றியை விரைவுப்படுத்தினார்.
தொடரை கைப்பற்றியது
நீண்டநேரமாக களத்தில் விளையாடி வந்த நிக்கோலஸ் 44 ரன்கள் எடுத்தபோது, அஸ்வின் பந்துவீச்சலில் ஸ்டெம்பிங் ஆக, நியூசிலாந்து 167 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதனால், இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவானது.
கடந்த போட்டியை விட இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டனர். மயாங்க் அகர்வால் (150, 62), சுப்மன் கில் (44, 47), அக்ஸர் (52, 41*) ஆகியோர் இரண்டு இன்னிங்ஸிலும் தனது முழு பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
தொடர் நாயகன் அஸ்வின்
இந்திய பந்துவீச்சு தரப்பிலும் அஸ்வின் 8, ஜெய்ந்த 5, அக்ஸர், சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நியூசிலாந்து அணி, இப்போட்டியில் இந்தியாவின் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது. அதில், 14 விக்கெட்டுகளை அஜாஸ் படேல்தான் கைப்பற்றியுள்ளார்.
ஆட்டநாயகனாக மயாங்க் அகர்வால் தேர்வுசெய்யப்பட்டார். மேலும், இரண்டு போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, 70 ரன்களை குவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Ind vs NZ 2nd Test day3: ஆர்ப்பரிக்கும் அஸ்வின்.. தள்ளாடும் நியூசிலாந்து... 540 ரன்கள் இலக்கு!