கொழும்பு (இலங்கை): இந்தியா, இலங்கை அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று (ஜூலை 18) நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டீசன்ட்டான தொடக்கம்
இதையடுத்து, இலங்கை அணிக்கு அவிஷ்கா - பானுகா இணை சிறந்த தொடக்கத்தை அளித்தது. புவனேஷ்வர், தீபக் சஹார் இருவரின் ஓப்பனிங் ஸ்பெல்லை இவ்விருவரும் நிதானமாக கையாண்டனர். இந்த இணையைப் பிரிக்க 10ஆவது ஓவரில் சஹால் களமிறக்கப்பட்டார்.
அதற்கு பலனாக அவிஷ்கா 32 (35) ரன்களில் சஹாலிடம் வீழ்ந்தார். அடுத்த களம்கண்ட அறிமுக வீரர் பானுகா ராஜபக்ஷ 24 (22) ரன்களிலும், மினோத் பானுகா 27 (44) ரன்களிலும் குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் டி சில்வா 14 (27) ரன்களில் நடையைக்கட்ட, இலங்கை 117 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அசலங்கா 38 (65), ஹசரங்கா 8 (7) ரன்களில் தீபக் சஹாரிடமும், கேப்டன் ஷனகா 39 (50) சஹாலிடமும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதிநேரத்தில் சாமிகா கருணாரத்ன சற்று கைகொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது.
கடைசி நேரக் காப்பாளன்
சாமிகா கருணாரத்ன 43 (35) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி கடைசி 10 ஓவர்களில் 74 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் தீபக் சஹார், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பாண்டியா சகோதரர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ப்ரித்வி "ஷோ"
இதன்மூலம், 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம்கண்டது. இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா, கேப்டன் ஷிகார் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பேட்டிங் பவர் பிளேவை தனதாக்கி கொண்ட ஷா, தொடர்ச்சியாக பவுண்டரிகளை சிதறவிட்டார். 24 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்பட 43 ரன்களை குவித்த ஷா, டி சில்வா பந்துவீச்சில் அவிஷ்காவிடம் கேட்ச் கொடுத்து தனது முதல் அரைசதத்தை தவறவிட்டார்.