அகமதாபாத் :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
கிரிக்கெட்டின் ஹை வோல்டேஜ் என்று அழைக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வரும் 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஒரு முறை கூட தோற்றதில்லை.
உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இந்த 7 ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. முதல் முறையாக கடந்த 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற உலக கோப்பையில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது.
அந்த ஆட்டத்தில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. அடுத்ததாக 1999 இங்கிலாந்து மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா வென்று இருந்தது.
2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா செஞ்சூரியனில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சச்சின் தெண்டுல்கர் 12 பவுண்டரிகள் அடித்து 98 ரன்கள் விளாசினார். 2 ரன்னில் சச்சின் சதத்தை நழுவவிட்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத ஆண்டு. கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட்டை கைப்பற்றியது. 2011 உலக கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தானை சந்தித்த இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.