அகமதாபாத்:உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (நவ. 19) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்த ஆட்டத்தைப் பார்க்க, இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (நவ. 19) கிரிக்கெட் போட்டி மட்டும்தான் நடைபெறுகிறதா? எனக் கேட்டால் அதுதான் இல்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மேலும் மெருகூட்டும் வகையிலும், ரசிகர்களைத் தாளாத ஆனந்தக் கடலில் ஆழ்த்தும் நோக்கத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதையும் படிங்க:20 வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா.. வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா?
அந்த வகையில் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, அதாவது நாளை பிற்பகல் 1.35 மணி முதல் 1.50 மணி வரை இந்தியா விமானப் படையின் சார்பாக ஏர் ஷோ நடைபெற உள்ளது. சுமார் ஒன்பது விமானங்களைக் கொண்டு நடத்தப்பட உள்ள இந்த ஏர் ஷோ ரசிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் உற்சாகப்படுத்தும் எனவும், கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.