ஹைதராபாத்:கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் நாம் எதிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு விராட் கோலி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தன்னுடைய 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் கால்தடம் பதித்த கோலி தற்போது உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில், தனது 35வது பிறந்த நாளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இன்று(நவ. 5) களமிறங்குகிறார் விராட் கோலி. இந்நாளில் கோலியின் சில சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
- 2011ஆம் ஆண்டு உலக கோப்பை மூலம் கிரிக்கெட் உலகிற்கு ரன் இயந்திரமாக அறிமுகமான விராட் கோலி, இதுவரை மூன்று உலக கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளார்.
- டி20 போட்டிகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் 7ஆயிரத்திற்கும் அதிக ரன்களை குவித்த ஒரே வீரர் விராட் கோலி.
- ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த கோலி, 276 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரத்து 525 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
- அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினுக்கு (49 சதம்) அடுத்தபடியாக உள்ளார் கோலி (48 சதம்). இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்து விடுவார்.
- 2008ஆம் ஆண்டு கோலி தலைமையிலான இந்திய அணி U19 உலகக் கோப்பையை 2வது முறையாக வென்றது.
- இதுவரை அவர் விளையாடிய 286 ஒருநாள் போட்டிகளில் 48 சதம், சராசரி 58.04 ஆக உள்ளது. அதேபோல் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 29 சதம் உட்பட 8 ஆயிரத்து 676 ரன்கள் விளாசி உள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தம் இதுவரை 78 சதங்கள் விளாசி சச்சினுக்கு அடுத்த படியாக உள்ளார்.
சச்சினுடன் ஒப்பிடாதீர்கள்:சச்சின் தெண்டுல்கர் மற்றும் விவி ரிச்சர்ட்ஸ் ஆகியோருடன் யாரையும் ஒப்பிடக் கூடாது. ஏனென்றால் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் விராட் கோலி கூறியவை இவை.
சச்சினின் ஓய்வுக்குப் பின்பு இனி அவரது இடத்தை நிரப்பப் போவது யார் என அனைவரும் முணுமுணுக்கத் தொடங்கினர். ஆனால் நவீன கிரிக்கெட் உலகின் அடையாளமாக உருவெடுத்து நிற்கிறார் விராட் கோலி. அவர் இன்று வரை பல சாதனைகளைத் தகர்த்துக் கொண்டே வருகிறார்.