டெல்லி: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது, இந்த தொடரின் போட்டிகள் இந்தியாவில் உள்ள 10 மைதானங்களில் நடக்கிறது. இந்நிலையில், இதன் 9வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் அதிக சதம்
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ரோஹித் சர்மா உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். இவர் 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஒரு சதம், 2019ல் இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக மொத்தம் 5 சதங்கள் என மொத்தமாக 6 சதங்கள் விளாசி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பையில் 1000 ரன்கள்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்தார். இவர் 19 இன்னிங்ஸில் இந்த ரன்களை எட்டியுள்ளார். முன்னதாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 1000 ரன்களை 19 இன்னிங்ஸில் கடந்தார். அதன் மூலம் அவர் குறைந்த இன்னிங்ஸில் 1,000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தற்போது அந்த சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளில் சேஸிங்கில் அதிக சதம்
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா உலகக் கோப்பை போட்டிகளில் சேஸிங்கில் மட்டும் 3 சதங்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோர்டன் கிரீனிட்ஜ், பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா மற்றும் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஃப்ளெமிங் 2 சதங்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.