சென்னை: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதன் 11வது லீக் போட்டி நேற்று (அக். 13) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வங்கதேசம் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பினார். வங்கதேசம் நிர்ணயித்த 246 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணியில், முதல் விக்கெட்டாக ரச்சின் வெளியேற, அதன்பிறகு களத்தில் பேட் செய்ய வந்தார் கேன் வில்லியம்சன்.
தொடக்கம் முதலே தனக்கே உண்டான பாணியில் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன் சேர்த்தது மட்டுமல்லாமல், அரைசதமும் விளாசினார் கேன் வில்லியம்சம். சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வில்லியம்சன், 78வது ரன்னை எடுக்கையில், மிட் ஆஃபில் நின்ற வங்கதேச வீரர் வீசிய பந்து அவரது கையில் வேகமாக பட்டது.
இதில் கேன் வில்லியம்சனின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் காயம் அடைந்த கேன் வில்லியம்சன் ரிடையர்ட் ஹட் கொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில், அவரின் கட்டை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக எக்ஸ்ரே மூலம் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு மீண்டும் காயம் ஏறப்பட்டுள்ளதால் வரும் ஆட்டங்களில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இது குறித்து நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில்; "முழங்கால் காயத்திற்கு பிறகு தனது கடின உழைப்பின் மூலம் அவர் மீண்டு வந்துள்ளார்.
ஆனால் மீண்டும் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த செய்தி அதிர்ச்சி அளித்தாலும், காயத்தின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஒய்வு பெறுவது நல்லது. கேன் வில்லியம்சன் எங்களது அணியின் ஒரு பெரிய அங்கம் மற்றும் உலக தரம் வாய்ந்த வீரர், அதே நேரத்தில் சிறந்த கேப்டனும் ஆவார். எனவே அவர் மீண்டும் திரும்புவதற்கு நாங்கள் அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவோம்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க:Steve Smith dismissal controversy: ஸ்மித் அவுடா இல்லையா.. உண்மையை உடைத்த கஜிசோ ரபாடா!