டெல்லி:ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இந்திய, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் 4 இடத்தை பிடித்துள்ளன.
இந்நிலையில் இன்று (அக். 25) நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில், 4வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணி, 7வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டியானது தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து பலம் & பலவீனம்:உலகக் கோப்பையை 5 முறை மகுடம் சூடிய ஆஸ்திரேலியா அணி இந்திய மைதானங்களை கணிக்க முடியாமல் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை நழுவியது. ஆனால் அதன் பின் நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியில் இருந்து மீண்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் ஓபனிங் பேட்ஸ்மேன்களான வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ், நல்ல ஃபார்மில் உள்ளனர். மற்ற வீரர்கள் நிலையாக ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். வேகப்பந்து வீச்சில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பினும் ஜோஸ் ஹசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். மற்றவர்கள் சிறப்பாக செயல்படாதது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மறுபுறம் ஸ்கார்ட் எட்வர்ட் தலைமையிலான நெதர்லாந்து அணி சர்வதேச போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் நடப்பு தொடரில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வி கண்டாலும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலக அரங்கை தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது.