மும்பை:ஐசிசி உலகக் கோப்பை தொடரில் முதல் அரையிறுதிச் சுற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று (நவ.15) நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 48.5 ஓவர்கள் முடிவில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
- நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஷமி, 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.
- அதேபோல், ஒரு உலகக் கோப்பை தொடரில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒரு தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2011ஆம் ஆண்டு 21 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜாகீர் கான் முதலிடத்தில் இருந்தார். தற்போது 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, முகமது ஷமி அந்த சாதனையை தட்டிப் பறித்துள்ளார்.
- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை (7) வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார், முகமது ஷமி. இதற்கு முன்னதாக ஸ்டூவர்ட் பின்னி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது.
- 17 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி, 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியதன் மூலம், Fastest 50 விக்கெட் என்ற மைல் கல் சாதனையையும், மிச்செல் ஸ்டார்க் வசம் இருந்து ஷமி பறித்திருக்கிறார்.