ஹைதராபாத்: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 11வது லீக் போட்டியாக நியூசிலாந்து அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. கடந்த இரு போட்டிகளிலுமே அருமையாக விளையாடி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இருப்பினும், அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உலகக் கோப்பையில் இதுவரை பங்கேற்கவில்லை. காயம் காரணமாக நீண்ட நாள் ஒய்வில் இருந்த கேன் வில்லியம்சன் உலகக் கோப்பையில் கலந்து கொள்வாரா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், ஒரளவு குணமடைந்த அவர் உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அவர் பில்டிங் செய்யவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான நியூசிலாந்தின் முதல் போட்டியில் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை. காயம் பெரிதானால் தன்னால் வரும் போட்டிகளிலும் விளையாட முடியாது என்ற காரணத்தால் அவர் போட்டிகளை தவிர்த்து வந்தார். இந்நிலையில், கேன் வில்லியம்சன் நன்றாக உள்ளார். அவர் வர இருக்கும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார் என அந்நாட்டு தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.