மும்பை:13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
அதன்படி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை (நவ.15) நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரில், இந்தியா வென்று சாதனை படைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கனவாக இருக்கிறது.
இருப்பினும், நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் நியூசிலாந்து அணியை இந்தியா ஒரு முறை கூட வீழ்த்தியது இல்லை என்பது ரசிகர்களை சற்று அச்சுறுத்துகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. இதற்கு பழி தீர்க்கும் விதமாக நாளை நடைபெறவுள்ள போட்டியின் மூலம், இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
நாளை மறுநாள் (நவ.16) நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.