தர்மசாலா: ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 7வது லீக் போட்டியாக வங்கதேசம் அணி இங்கிலாந்து அணியை இன்று சந்தித்தது. இந்த போட்டி இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் களம் இறங்கினர். நல்ல தொடக்கத்தைக் கொடுத்த இந்த ஜோடியானது அணியின் ஸ்கோர் 115 ரன்கள் எட்டிய போது பிரிந்தது. 52 ரன்கள் எடுத்த பேர்ஸ்டோவ், ஷாகிப் அல் ஹசன் பந்தில் போல்ட் ஆனார். அதன் பின் வந்த ஜோ ரூட், மலானுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.
தொடக்கம் முதலே சிறப்பாக டேவிட் மலான் சதம் விளாசினார். மறுபுறம் இருந்த ரூட் அரை சதம் கடந்தார். ஒரு கட்டத்தில் மலான் ஆட்டமிழக்க, அதனை தொடர்ந்து மற்ற வீரர்கள் சேர்ப்ப ரன்களில் வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹந்தி ஹாசன் 4 விக்கெட்டும், ஷரீபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து வங்கதேசம் அணி 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கினர். தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ஒரு பக்கம் இருந்து ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் வந்த வேகத்தில் வெளியேறினார். இறுதியில் 48.2 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 227 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 76, முஷாப்குர் ரஹீம் 51 ரன்களும் எடுத்தனர். அதே போல் இங்கிலாந்தின் பந்து வீச்சில் ரீஸ் டோப்லி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:Shubman Gill : சுப்மான் கில் உடல் நிலை? பாகிஸ்தான் ஆட்டத்தில் சுப்மான் கில் விளையாடுவாரா?