ஐதராபாத் :உலகம் முழுவதும் உலக கோப்பை கிரிக்கெட் ஜுரம் பரவத் தொடங்கி விட்டது. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை வெல்லப் போகும் அணி யார் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் எழத் தொடங்கி விட்டது. அது இந்தியா, ஆஸ்திரேலியாவா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தா என ரசிகர்கள் இப்போதே தங்களுக்குள் போட்டி போட தொடங்கிவிட்டனர்.
மைதானத்திற்குள்ளே கோப்பைக்காக மல்லுக்கட்டும் வீரர்களின் எண்ணிக்கையை காட்டிலும், மைதானத்திற்கு வெளியே தங்களை பிரதிபலிக்கும் வீரர்களுக்காக போட்டிப் போடும் ரசிகர்களின் கிரிக்கெட் பங்களிப்பு அளப்பறியது. தற்போதைய சூழலில் உலக கோப்பையை வெல்லும் அணி எது என்று கேள்வி எழுப்பினால் ஒவ்வொருவரின் பதிலும் வெவ்வேறாக இருக்கும்.
ஒருவர் இந்தியாவில் தொடர் நடப்பதால் நிச்சயம் இந்தியா தான் வெல்லும் என்பார். மற்றவர்கள் இங்கிலாந்து மீண்டும் கோப்பையை தக்கவைக்கும், ஆஸ்திரேலியா தான் சாம்பியன் பட்டம் வெல்லும், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என தங்களின் விருப்ப அணியை சொல்லிக் கொண்டே போவர்.
ஆனால், இரண்டு முறை உலக கோப்பை கிரிக்கெட் 20 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆட்சி செய்த ஒரு அணியின் பெயர் பலரின் எண்ணங்களை விட்டு கரைந்து போனது என்பது நிதர்சனமான உண்மை. என்னதான் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணி உருவாக்கி இருந்தாலும், அந்த அணிக்கே உலக கோப்பையை வெல்ல நாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டன.
ஆனால், கிரிக்கெட்டுக்கு அப்பாற்றபட்ட ஒரு அணி, 40 முதல் 50 ஆண்டுகள், மற்ற உலக அணிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடி மூடிசூடா மன்னனாக திகழ்ந்தது. அது தான் வெஸ்ட் இண்டீஸ் அணி. 1970களில் மெல்ல கிரிக்கெட் உலகளவில் பரவி பலரது கவனத்தை ஈர்த்தது. அதற்கு முன் வரை கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திலும், அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் மட்டுமே விளையாடப்பட்டு வந்தன.
அப்படி உலக கவனம் ஈர்த்த கிரிக்கெட்டில் நடந்த முதலாவது உலக கோப்பையை, யாரும் எதிர்பாராத விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றிச் சென்றது உலகையே சற்று உற்று நோக்கத் தொடங்கியது. எந்த ஒரு செயலையும் பிரம்மாண்டமாக கூறும் போது அதன் மீதான பார்வை வேறுபடும் என்பதற்கு உதாரணம் போல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தோற்றம் மற்ற நாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மலைப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியது.
ஆறு அடி உயரம், கட்டு மஸ்தான உடல்வாகு, நேர்த்தியான ஆட்டம் உள்ளிட்ட அம்சங்களே உலக அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான அதீத கவனத்தை ஈர்த்தது. 70களில் தங்களுக்கே உரிய பாணியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உலக மிரட்டி வந்தனர். ஆக்ரோஷமான பந்துவீச்சு, அடித்து ஆடும் பேட்டிங் ஸ்டைல், நேர்த்தியான பீல்டிங் உள்ளிட்ட திறன்களால் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக அரங்கில் வெற்றிகரமான அணியாக கோலோச்சி வந்தது.
தற்போதைய காலக் கட்டத்தில் அதிவேகமாக பந்து வீசக் கூடிய வீரர்கள் குறித்து கணக்கெடுத்தால், பிரெட் லீ, சோயிப் அக்தர், ஷான் டைட், ஷேன் பாண்ட், டேல் ஸ்டெயின் என அங்கொன்று இங்கொன்றாக பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ரசிகர்களின் நினைவுகளுக்கு வருவர். ஆனால், 70 - 90 காலக்கட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் என்று எண்ணினால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மட்டுமே 4 முதல் 5 வீரர்கள் அதிவேகமாக பந்துவீசக் கூடியவர்கள் இருப்பர்.
உதாரணத்திற்கு மைக்கெல் ஹோல்டிங், மல்கோம் மார்ஷல், ஆண்டி ரோபர்ட்ஸ், ஜோயல் கார்னர் என உலக அரங்கை மிரட்டக் கூடிய வேகப்பந்து வீச்சாளர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னகத்தே கொண்டு இருந்தது. இவர்களுக்கு அணி வேறுபாடு இன்றி உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது என்றால் அது மிகையாகாது.