மும்பை:ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. முன்னதாக அணிகளுக்கு இடையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரேட் முறை நடைபெற்றது. அதன்படி, சில அணிகள் தங்களது வீரர்களை மாற்றிக் கொண்டன.
இதனையடுத்து, அணைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் (நவ. 26) நேற்று சமர்பித்தது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, தன்னை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்புவதாக செய்திகள் கடந்த சில நாட்களாக தீயாய் பரவி வந்தன.
இதற்கு முடிவுகட்டும் விதமாக குஜராத் டைட்டன்ஸ் அணி, அவர்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் ஹர்திக் பாண்டியாவே அந்த அணிக்கு கேப்டனாக தொடர்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர நாயகன் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதாக ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.