ராவல்பிண்டி(பாகிஸ்தான்):பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில், இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது. வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகளால் வீரர்கள், உதவியாளர்கள் என இங்கிலாந்து அணியில் 13 பேர் பாதிக்கப்பட்டனர்.
போட்டி திட்டமிட்டபடி நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதற விட்டு ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். ஒரு நாள் தொடரில் விளையாடுவது போல் ரன் மழை பொழிந்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஜோடி, ஷேக் க்ராவ்ளே 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்னும் அடித்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஓலி போப்பும், பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறவிட்டு தீவிர ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். இதனிடையே களமிறங்கிய ஜோ ரூட் தன் பங்குக்கு 23 ரன்கள் மட்டும் எடுத்துக் கொடுத்து வெளியேறினார். 108 ரன்கள் குவித்து ஓலி போப்பும் வெளியேற, ஆட்டம் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேரி ப்ரூக் வசம் சென்றது. அடித்து ஆடிய ஹேரி ப்ரூக் சதம் அடித்தார். ஆட்ட நேர முடிவில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 34 ரன்களும், ஹேரி ப்ரூக் 101 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.