தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

4ஆவது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா! - அக்சர் பட்டேல்

India throws into Test championship
India throws into Test championship

By

Published : Mar 6, 2021, 3:50 PM IST

Updated : Mar 6, 2021, 4:13 PM IST

15:15 March 06

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.  

இந்திய சுழலில் சிக்கிய இங்கிலாந்து

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி(9), டோமினிக் சிப்லி (2) ஆகியோர் அக்சர் பட்டேலின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.  

பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களிலும், கேப்டன் ஜோ ரூட் 5 ரன்களிலும் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி அரை சதம் கடந்தார்.

பின் 55 ரன்கள் எடுத்த பென் ஸ்டோக்ஸ் வாஷிங்டன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது.  

இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

ரிஷப், வாஷிங்டன் அதிரடியால் தப்பிய இந்தியா

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் சுப்மன் கில், புஜரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.  

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மாவும் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - வாஷிங்டன் சுந்தர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.  

இதில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருப்பினும் 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பந்த், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  

மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் எதிரணி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். இதனால் சதத்தைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து நடையைக் கட்டியதால், 96 ரன்கள் எடுத்திருந்த வாஷிங்டன் சுந்தர் நூலிழையில் சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.  

இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 365 ரன்களை எடுத்தது. மேலும் 160 ரன்கள் முன்னிலையையும் பெற்றது.  

இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறிய இங்கிலாந்து

பின்னர் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்களை அஸ்வின் - அக்சர் இணை ஆரம்பத்திலேயே வெளியேற்றியது.  

அதைத்தொடர்ந்து வந்த ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப் ஆகியோர் இந்திய அணியின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் மூலம் அக்சர் பட்டேல் நான்காவது முறையாக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.  

அதன்பின் களமிறங்கிய டேனியல் லாரன்ஸ், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். இருப்பினும், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அபார பந்துவீச்சு திறனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வெளியேற்றி, அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.  

இந்தியா அபார வெற்றி

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியுள்ளது.  

அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குச் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளது. அதன்படி வருகிற ஜூன் மாதம் லார்ட்ஸில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி - நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.  

இதையும் படிங்க: மகளிர் கிரிக்கெட் தொடருக்கு பார்வையாளர்கள் அனுமதி - யுபிசிஏ அறிவிப்பு

Last Updated : Mar 6, 2021, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details