அகமதாபாத்: மூன்றாம் நடுவர் தனது முடிவில் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா - இங்கிலாந்து பகலிரவு போட்டியின் நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம் இங்கிலாந்து அணியினர் கேட்டுக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மற்றும் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்தை சந்தித்தனர். அப்போது போட்டியின்போது சுப்மன் கில், ரோஹித் ஷர்மா ஆகியோரின் விக்கெட் விஷயத்தில் மூன்றாம் நடுவரால் எடுக்கப்பட்ட முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமைந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஸ்டூவர்ட் ப்ராட் பந்தில் இந்திய தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில் அடித்த பந்தை, ஸ்லிப்பில் நின்ற பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தார். இந்த விக்கெட் மூன்றாம் நடுவரின் பரிசீலனைக்கு சென்றது. அதில், பென் ஸ்டோக்ஸ் பிடித்த பந்து புற்களில் பட்டிருப்பதாகக் கூறி அவுட் தரவில்லை.
அதேபோல், ரோஹித் ஷர்மாவும் இறங்கி ஆட முற்பட்டு பந்தை தவறவிட்டார். அந்த நேரத்தில் விரைந்து அவரை ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்தார் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ். ரோஹித் தனது கால்களை கிரீஸினுள் முழுவதுமாக வைப்பதற்குள்ளாகவே ஃபோக்ஸ் ஸ்டம்பிங் செய்தபோதிலும், அந்த அவுட்டும் மூன்றாம் நடுவரால் மறுக்கப்பட்டது.
இந்த இருசம்பவங்களினால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஜோ ரூட் மற்றும் கிறிஸ் சில்வர்வுட், நடுவர்கள் இந்தியாவுக்கு சாதமாக செயல்படுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளதாக தெரிவித்தனர்.