பெங்களூரு : 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
நடப்பு சீசன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாதி கிணற்றை கடந்துவிட்ட நிலையில், அடுத்த சுற்று வாய்ப்பில் அணிகள் நீடிக்க இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (அக். 26) நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார். இங்கிலாந்து அணியின் இன்னிங்சை ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான் ஆகியோர்ன் தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 45 ரன்கள் குவித்தது. டேவிட் மலான் 28 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மேத்யூஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் குசல் மென்டிசிடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 3 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அதே மேத்யூஸ், குசல் மென்டிஸ் ஜோடியால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்த இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு அடியாக மற்றொரு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் (30 ரன்) ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
இதனிடையே களமிறங்கிய கேப்டன் பட்லர் 8 ரன்கள் மட்டும் சேர்த்து அதிருப்தி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் வந்த வேகத்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். ஒருபுறம் பென் ஸ்டோக்ஸ் போராட மற்றொரு புறமோ சீட்டுக் கட்டு போல் இங்கிலாந்து அணியின் விக்கெட் வரிசை சரிந்தது.