பர்மிங்ஹாம் (இங்கிலாந்து):இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5ஆவது டெஸ்ட் போட்டி, பர்ஹிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று (ஜூலை 1) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, இந்தியா தனது பேட்டிங்கை தொடங்கியது.
ஓப்பனிங்கில் சற்றுநேரம் தாக்குபிடித்த கில் 17, புஜாரா 13 ரன்களுக்கும் ஆண்டர்சனிடம் வீழ்ந்தனர். இதைத்தொடர்ந்து, மழை காரணமாக ஆட்டம் சற்றுநேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர், ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே ஹனுமா விஹாரி 20 ரன்களுக்கும், விராட் கோலி 11 ரன்களுக்கும் மேத்யூ பாட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ஸ்ரேயஸ் ஐயரும் 15 ரன்களில் வெளியேற, ரிஷப் பந்த் - ரவிFந்திர ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
ரிஷப் பந்தின் சதத்தை கொண்டாடும் ஜடேஜா
இந்த ஜோடி துவண்டுபோன இந்திய அணியை மீட்டெடுத்தது. சுமார் 40 ஓவர்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி 222 ரன்களை குவித்து அசத்தியது. இதில், ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து, ரிஷப் பந்த் 146 ரன்களில் ரூட் பந்துவீச்சிலும், ஷர்துல் தாக்கூர் 1 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தர். இதனால், ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்தது. ஜடேஜா 83 ரன்களுடனும், ஷமி ரன் ஏதும் இன்றியும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில், ஆண்டர்சன் 3, மேத்யூ பாட் 2, ரூட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று (ஜூலை 2) மதியம் 3 மணிக்கு தொடங்கும்.