ஹிசர் (ஹரியானா): கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரோஹித் சர்மாவுடன் இணைந்து யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் நேரலையில் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது யுவராஜ் சிங், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திர சாஹல் வெளியிட்ட டிக்டாக் காணொலி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசினார்.
அதில், சாஹல் சார்ந்திருக்கும் சாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்ததாகச் சர்ச்சை எழுந்தது. மேலும் அக்காணொலி சமூக வலைதளங்களிலும் வைரலானதை அடுத்து, கடுமையான எதிர்ப்பும் எழுந்தது.
பிப்ரவரியில் புகார்
இதையடுத்து, ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர்வலரும், வழக்கறிஞருமான ராஜத் கல்சான் என்பவர் ஹிசார் நகர காவல் நிலையத்தில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி யுவராஜ் சிங் மீது புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், "சாஹல் குறித்து சாதி ரீதியாக யுவராஜ் சிங்கின் பேச்சு, பட்டியலின மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்தது. அந்த நேரலை நிகழ்வின் காணொலி பலரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. எனவே, யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.