தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...? உலகக்கோப்பைக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்!

ஒவ்வொரு முறையும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வருவதும் போவதுமாய் இருந்த தினேஷ் கார்த்திக், உலகக்கோப்பை இந்திய அணியில் எவ்வாறு இடம்பெற்றார் என்பது குறித்து அவர் கடந்துவந்த கிரிக்கெட் வாழ்க்கை தொகுப்பை காணலாம்.

தினேஷ் கார்த்திக்

By

Published : Apr 16, 2019, 6:18 PM IST

உலகக்கோப்பைத் தொடர் மே 30ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களை அறிவிக்க ஏப்ரல் 20ஆம் தேதியே கடைசி நாள் என ஐசிசி அறிவித்தது. இந்தியா சார்பாக பங்கேற்கவுள்ள வீரர்களின் பெயர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என இந்திய அணி தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அறிவித்திருந்தார்.

முக்கிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என இந்திய அணி ரசிகர்களுக்கு தெரிந்திருந்த நிலையில், நான்காம் நிலையில் ஆடப்போவது யார் என்ற கேள்வி, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் இருவரில் யார் இடம்பெறுவார்கள் என்பன உள்ளிட்ட கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்திருந்தது.

ஏனென்றால் கடந்த இரண்டு வருடமாய் இந்திய அணி நான்காம் நிலையில் மியூசிக்கல் சேர் விளையாடிக்கொண்டிருந்தது. யுவராஜ் சிங், ரெய்னா, ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ராயுடு, ரிஷப் பந்த், விஜய் சங்கர் என அனைவரையும் ஆட வைத்து வந்தது.

இந்நிலையில், நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியான சில நிமிடங்களில் கிரிக்கெட் ரசிகர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் இந்திய வீரர்களின் புகைப்படங்கள் நிரம்பின. அதில் தமிழ்நாட்டிலிருந்து விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவர் இடம்பிடித்திருந்தனர் .

இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெற்றது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றது பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

உலகக்கோப்பை அணி

கிட்டத்தட்ட 2004இல் இருந்து இந்திய அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக் (டிகே), தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவந்தார். இந்தியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் என்பது மதமாக கருதப்படும் நிலையில், ஒரு வீரர் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து வெளியேறிவிட்டால் அணிக்குள் திரும்ப வருவதென்பது கனவாக மாறிவிடும். ராபின் உத்தப்பாவின் கிரிக்கெட் வாழ்க்கையை கவனித்தால் இதுபுரியும்!

ஆனால் தொடர்ந்து அணிக்குள் வருவதும் போவதுமாய் டிகே ஆடி வந்தார். 2007 இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது மைக்கெல் வாஹனை தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் போன்று டைவ் செய்து ஸ்டெம்பிங் செய்தார். ரசிகர்கள் மத்தியில் யார் இந்த வீரர் என்ற கேள்வியுடன் தனக்கான முதல் அங்கீகாரத்தை பெற்று உலகக் கிரிக்கெட்டுக்கு தன் வருகையை அறிவித்தார்.

தினேஷ் கார்த்திக்

பின்னர் தோனி என்னும் சுனாமியால் இந்திய விக்கெட் கீப்பர்கள் வேறு யாரும் இந்திய அணிக்கு தேவைப்படாத நிலை ஏற்பட்டது. ஆனால் 2007ஆம் ஆண்டு டிகே வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. தோனி விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருந்த அதே இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கினார். அந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு சதம் மற்றும் ஆறு அரைசதம் அடித்து கெத்து காட்ட, மீண்டும் விதி டிகே வாழ்க்கையில் விளையாடியது. இந்திய அணியிலிருந்து நீக்கம்!

தினேஷ் கார்த்திக்

அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெற, ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. பின்னர் டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதற்கு டிகே ஒரு காரணம். அதன் பின்னரும் டிகேவின் பெயர் இந்திய அணிப் பட்டியலில் நிரந்தரமான வீரராக இடம்பெறவில்லை. அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார். அந்நேரத்தில் சொந்த வாழ்க்கையிலும் அவருக்கு சோதனைக்காலமாய் அமைந்தது. இதனால் கிரிக்கெட் வாழ்க்கையும் பாதித்தது.

அதேபோல் ஐபிஎல் தொடர்களில் பல்வேறு அணிகளுக்கு மிகப்பெரிய விலைக்கு மாற்றமடைந்து வந்தார். ஏனென்றால் உள்ளூர் கிரிக்கெட்டை கவனிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும்... தினேஷ் கார்த்திக் கில்லியாய் செயல்படுவார் என்று.

எவ்வாறு டிராவிட் அணிக்கு தேவையென்றால் எந்த நிலையிலும் ஆடுவாரோ, அதேபோல் டிகேவும் தொடக்க வீரர், ஃபீல்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஃபினிஷர், விக்கெட் கீப்பர் என அத்தனை முயற்சிகளையும் சிறப்பாக செய்வார்.

தினேஷ்

பள்ளி காலத்தில் சதங்களை ஜாலியாக அடித்த தினேஷ் கார்த்திக்கிற்கு சர்வதேச கிரிக்கெட் சோதனையாகவே இருந்து வந்தது. சென்னையில் ஆடும் பல விளையாட்டு வீரர்களுக்கு தெரியும் தினேஷ் கார்த்திக் திறமைசாலி என்பது.

அதன் பின்னர் 2012இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் உச்சபட்ச ஃபார்மில் ஆடினார். கோப்பையை வென்ற அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்த நிலையில், அதன் பின்னரும் ஃபார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதனையடுத்து தினேஷ் கார்த்திக்கிற்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் கோப்பை தொடரில்தான்.

கடைசி பந்தில் வெற்றியாளரைத் தீர்மானிக்கு நிலை ஏற்பட்டது. அனைவரின் நினைவும் தல தோனியை யோசிக்க, தினேஷ் கார்த்திக் களத்தில் இருக்கிறார். அந்தக் கடைசிப் பந்தில் அடித்த சிக்சர் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரே நாளில் ஹீரோவானார் டிகே. தனக்கு வாய்ப்புத் தராத இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கதவுகளை இந்த சிக்சர் மூலம் உடைத்தெறிந்தார்.

தினேஷ் கார்த்திக்

அந்தப் போட்டிக்கு பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிகே கூறியதாவது, 'ஒரு போட்டியில் நான் சொதப்பினாலும் நிச்சயம் அணியிலிருந்து வெளியேற்றப்படுவேன்' எனக் கூறினார். அதேபோன்று கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராயுடுவிடம் நான்காம் இடம் பறிபோனது. இதனையடுத்து மீண்டும் வாய்ப்புக்காக கத்திருக்கத் தொடங்கினார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம், ஆஸ்திரேலியப் பயணம் என ஆடிய சில போட்டிகளில் வெற்றிகரமாக போட்டிகளை முடித்துக் கொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் குருணால் பாண்டியாவுக்கு ஸ்டிரைக் கொடுக்காததால் மீண்டும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கம். நொந்துபோனார் தினேஷ் கார்த்திக்!

ஏனென்றால் உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆடும் கடைசி ஒருநாள் தொடர் அதுதான். இவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடம்பெற்றனர்.

இந்திய ரசிகர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏன் இந்தத் தொடரில் டிகே நீக்கப்பட்டார் என ஊடகங்கள் எழுதத் தொடங்கின. தோனிக்கு ஓய்வளித்துவிட்டு நான்காம் நிலையில் ரிஷப் பந்த்-ஐ கோலி களமிறக்கினார். பந்த் எதிர்பார்த்த அளவிற்கு கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை. அந்தத் தொடரை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆஸ்திரேலிய அணி 3-2 என வென்றது.

பின்னர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு எப்போது என ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். இதற்கு பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், 'மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனுக்கான தேவை இருப்பதாக அறிகிறோம். அதனால் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் இருவரிடையே மிகப்பெரிய போட்டி இருக்கிறது' எனத் தெரிவித்தார்.

14 வருடங்களாக இந்திய அணியில் இடம்பெற்று வரும் தினேஷ் கார்த்திக், நான்கு போட்டிகள் மட்டுமே ஆடிய ரிஷப் பந்த்-உடன் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இடது கை பேட்ஸ்மேனுக்கான தேவை மனீஷ் பாண்டே, ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ராயுடு ஆகியோர் ஆடுகையில் தெரியாமல் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னர் தெரியவந்ததுதான் நகைச்சுவையாய் இருந்தது.

இந்நிலையில் அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம் என ஏப்ரல் 15ஆம் தேதி தேர்வுக்குழு தலைவர் அறிவித்தார். ஆம், 14 வருடமாக சர்வதேச கிரிக்கெட் ஆடும் தினேஷ் கார்த்திக்கிற்கு அனுபவம் மிகப்பெரியது. அதனால்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கொல்கத்தா அணி டிகேவை கேப்டனாக கொண்டு செயல்பட்டுவருகிறது.

அதேபோல் இந்திய அணி வென்ற அனைத்து போட்டிகளிலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்கும் திறன் டிகேவிற்கு யாருடன் ஒப்பிட முடியாத அளவிற்கு அதிகம் உள்ளது.

உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றது குறித்து நெட்டிசன்கள் டிகேவுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு எனத் தெரிவித்தனர். அனைவரிடமும் கூறுவதுதான். இது டிகேவுக்கு வாய்ப்பு அல்ல; அது அவருக்கான இடம். சொந்த முயற்சியால் தன் இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர். உரிமையோ வாய்ப்போ யாருக்கும் கொடுப்பதோ பெறுவதோ அல்ல; அது அனைவருக்கும் இயற்கையானது.

உலகக்கோப்பை அணியில் டிகே இடம்பெற்றிருப்பது குறித்து உத்தப்பா கூறிய வார்த்தைகள் இவை:

தகுதி மற்றும் ஆட்டத்திறன் ஆகிய அடிப்படையின் கீழ் ஒருவர் இந்திய அணியில் தேர்வாக வேண்டும் என்றால், அந்தத் தகுதி தினேஷ் கார்த்திக்கிற்குத்தான் உள்ளது. நீதி வென்றுவிட்டது. டிகேவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக மிகச்சிறந்த ஃபினிஷராக செயல்பட்டு வருபவர் டிகே என உணர்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் தினேஷ் கார்த்திக் வீழ்ந்துவிட்டார் என எண்ணிய அனைவருக்கும், உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று பதிலடி கொடுத்து சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். உலகக்கோப்பை அணியில் மிகச்சிறந்த வெற்றியை நிச்சயம் பதிவு செய்வார். வாழ்த்துகள் தினேஷ் கார்த்திக்!

ABOUT THE AUTHOR

...view details